”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே,
உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால், வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் நீங்கள் செய்தவை நியாயமானவையா? சமூகநீதி இலக்கணத்துடன் இயைந்ததவையா” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கேட்டுள்ளார்.
அவர் முன்வைத்துள்ள பத்து கேள்விகள் :
” 1. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றமே கடந்த 2022&ஆம் ஆண்டு மார்ச் 31&ஆம் நாள் அளித்தத் தீர்ப்பில் கூறிவிட்ட நிலையில், அதை செயல்படுத்துவதில் உங்களுக்குத் தடையாக இருப்பது எது?
2. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1209 நாள்களாகிவிட்ட நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியுமா, முடியாதா?
3. 08.05.2022&ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் உங்களை நானும், பா.ம.க. மூத்த நிர்வாகிகளும் சந்தித்து மனு அளித்த போது, உரிய தரவுகளைத் திரட்டி, மே 10&ஆம் நாளுடன் நிறைவடையவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்குள், அதாவது 32 நாள்களுக்குள் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவேன்.
அது சாத்தியமாகவில்லை என்றால், மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக, அதாவது கூடுதலாக ஒரு மாதத்திற்குள், பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தீர்களே, அதை ஏன் நீங்கள் நிறைவேற்றவில்லை?
4. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறுகிறீர்களே, அப்படித் தான் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த இடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
5. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறீர்களே, இது மாநில அரசின் உரிமைகளை தாரை வார்க்கும் செயல் அல்லவா?
6. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 50% ஆக உயர்த்தப்படவும், வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கவும் காரணமாக இருந்த சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் ஆணையத்தால் திரட்டப்பட்டவை என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
7. இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 14.07.2006ஆம் நாள் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் அதன் அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்தது. அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 25.03.2008&ஆம் நாள் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் 243 நாள்களில் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கும்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிடப்பட்டு, இவற்றைவிட பல மடங்கு, அதாவது 922 நாள்கள் ஆகிவிட்ட நிலையிலும் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தாமதித்து வருகிறது. இது தான் உங்கள் சமூகநீதியா?
8. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் , ஒரு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பதவிக்காலமும் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு வழங்கப்பட்ட சமூகநீதிப் பணியை முடிக்காமலேயே பதவிக்காலத்தை நிறைவு செய்வது இது தான் முதல்முறை என்பது உங்களுக்குத் தெரியுமா? இது அரசுக்கு அவமானம் அல்லவா?
9. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதுகுறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் என்பது தெரியுமா?
10. பிகார், தெலுங்கானம், ஒதிஷா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்த பிறகும், மாநிலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கர்நாடகம் இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் கூட தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையா?
மருத்துவர் அய்யா அவர்களால் 20.07.1980&ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் சமூகநீதிக்காக வன்னிய மக்கள் போராடி வருகின்றனர். இனியும் தாங்கள் ஏமாற்றப்படுவதை தாங்கிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை; இட ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கவும் அவர்கள் விரும்பவில்லை. சமூகநீதி அவர்களின் உரிமை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே,
வன்னியர்களின் சமூகநீதியை மறுத்து உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு நீங்களே முடிவுரை எழுதி விடாதீர்கள். உங்களுக்கு இப்போது கிடைத்திருப்பது தான் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வன்னியர்களின் வலிகள், வேதனைகள், உணர்வுகள் ஆகியவற்றை மதித்து, அவர்களின் உரிமையான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுங்கள்.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.