கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் திடீர் மாற்றம்! மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் திடீர் மாற்றம்! 
மருத்துவர்கள் போராட்டம் காரணமா?
Published on

கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் கண்ணன் ஐஏஎஸ் மனித உரிமை ஆணைய செயலாளராக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வந்த சூழலில் இந்த பணியிட மாற்றம் நடந்துள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறையில் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்த ஐந்தே மாதத்தில் 26 கால்நடை உதவி மருத்துவர்கள் நிர்வாக காரணம் என்ற பெயரில் எழுநூறு கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

புதிதாக கால்நடை பராமரிப்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள vetnet செயலியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக மனு அளித்த 10 கால்நடை உதவி மருத்துவர்களும் இந்த பணியிட மாறுதலில் பாதிக்கப்பட்டனர். மேலும் 16 கால்நடை உதவி மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்த காரணத்திற்காக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து கால்நடை உதவி மருத்துவர்கள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டங்களை அறிவித்து கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி வந்தனர். மருத்துவர்களின் சங்கம் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் பேச்சுவார்த்தைகள், நீதிமன்றத்தை அணுகுதல் போன்றவற்றிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் கண்ணன் ஐஏஎஸ் பணியிடமாறுதல் செய்யப்பட்டு அம்ரித் ஐஏஎஸ் புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதைத் தொடர்ந்து நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் வழங்கப்பட்ட 26 கால்நடை உதவி மருத்துவரின் பணியிட மாறுதலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ரத்து செய்ய வேண்டும் என கால்நடை உதவி மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com