அண்ணா பல்கலை. கட்டண உயர்வு- எதிர்ப்பால் நிறுத்திவைப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் திடீரென தேர்வுக் கட்டணத்தில் 50 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர் அமைப்புகள், பா.ம.க. உட்பட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடகத்தினரைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
கட்டண உயர்வு மாணவர்களை பாதிக்கும் என முதலமைச்சர் தனக்கு அறிவுறுத்தியதாகவும் அவரின் அறிவுரையின்படி மீண்டும் சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி கட்டண உயர்வை ரத்துசெய்ய முடிவு எடுக்கப்படும் என்றும் அதுவரை இந்த உயர்வு நிறுத்திவைக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
இந்த ஆண்டும் வரவுள்ள ஆண்டுகளிலும் கட்டண உயர்வு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பல்கலைக்கழக சிண்டிகேட் கட்டணத்தை உயர்த்தி கடந்த ஆண்டு நவம்பரில் தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓராண்டுக்கு அது நிறுத்திவைக்கப்பட்டது.