முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை, பா.ஜ.க. மாநிலத் தலைவர்
முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை, பா.ஜ.க. மாநிலத் தலைவர்

பெட்ரோல் குண்டு... பாம்பு கார்த்திக்- தி.மு.க.வுக்கு அண்ணாமலை கண்டனம்!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் தி.மு.க. பிரமுகர் பாம்பு கார்த்திக் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“ தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற தி.மு.க.வைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டே, ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர். தி.மு.க. தலைமைக்கும், அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெருக்கமான நபராக அறியப்படும் இந்த பாம்பு கார்த்திக், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் என்று சிறுவர்களைக் கட்டாயப்படுத்துவதாகவும், அதைத் தட்டிக்கேட்ட வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிகிறது.

கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும், மாதம் 3.5 டன் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, இந்தப் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில், துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்துவருவது, கடத்தல்காரர்களின் பின்புலத்தைக் காட்டுகிறது. ஆளுங்கட்சி என்பதால், காவல்துறையினரோ, தமிழக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

பாரதப் பிரதமர் மோடி @narendramodi, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும்போது, திமுகவினர் ரேஷன் அரிசியைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து கொழுப்பது கீழ்த்தரமானது. ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும்.

உடனடியாக, இந்த பாம்பு கார்த்திக் என்ற நபர் உட்பட்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் தி.மு.க. அரசு கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும்விதமாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பின்மையை உருவாக்கியிருக்கும் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.வுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அண்ணாமலை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com