கமல் பேச்சு… பதிலுக்கு அண்ணாமலை ‘எச்சு’!
“பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாக்பூர் இந்தியாவின் தலைநகரமாக மாறிவிடும்” என்று கமல்ஹாசன் பேசியதற்கு “அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்து மூளையைப் பரிசோதிக்க” வேண்டும் என அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து நேற்று பரப்புரையில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “இந்தியாவின் தலைநகர், ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூருக்கு மாற்றப்படும்” என்று குறிப்பிட்டார்.
இது குறித்து கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் அங்குள்ள சரவணம்பட்டியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,"இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும்? இப்படி கூறிய கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையைப் பரிசோதிக்க வேண்டும். அவர் உண்மையில் நன்றாகத்தான் இருக்கிறாரா? அவரது இடது, வலது மூளை சரியாக செயல்படுகிறதா? சுயநினைவோடுதான் இருக்கிறாரா? சரியாக சாப்பிடுகிறாரா? என பரிசோதிக்க வேண்டும். அவர் மட்டுமல்ல இப்படி கூறுபவர்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்.” என பதிலளித்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்தை மக்கள் நீதி மையம் தீவிரமாக எடுத்துக்கொண்டது. கொங்கு பாணியில் சொல்வதானால், எச்சாக அதாவது கூடுதலாகக் கருத்தில்கொண்டு, ம.நீ.ம. செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் முரளி பதில் கொடுத்துள்ளார்.
“செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாத அண்ணாமலை நாக்கு இன்று எங்கள் தலைவர் பக்கம் திரும்பியிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நிழல் கேப்பிடலாக இருக்கும் நாக்பூர், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நிஜ கேப்பிட்டலாக மாறிவிடும் என்பது மூளையிருப்பவனுக்குப் புரியும். அண்ணாமலைக்கு?” என்று அப்பாஸ் தன் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.