அண்ணாமலை
அண்ணாமலை

படிக்கப் போகிறாராம் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பிலான படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்துக்குச் செல்ல உள்ளார். இதனால், அவர் வகிக்கும் மாநிலத் தலைவர் பதவி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2020ஆம் ஆண்டு தமிழக பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆனதும், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு வந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினாலும், கட்சியின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு அண்ணாமலை தோல்வியைத் தழுவினார். பின்னர் தமிழக பாஜகவில் பல்வேறு சலசலப்புகள் நிகழ, சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செவனிங் உதவித் தொகை மூலம் சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பைப் பயில அண்ணாமலை மூன்று மாதம் இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரின் இந்த படிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

அவர் படிப்பதற்கான தங்குவதற்கான அனைத்து செலவுகளையும் அந்த பல்கலைக்கழகமே பார்த்துக் கொள்கிறது. இதற்கான விசா நடைமுறைக்காக அண்ணாமலை பெங்களூருக்குச் சென்றுள்ளார்.

அண்ணாமலை லண்டனுக்குப் படிக்கச் செல்வதால், இந்த மூன்று மாத காலத்துக்கு தமிழக பாஜகவை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரி - தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com