அண்ணாமலை
அண்ணாமலை

2024-க்குப் பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது - அண்ணாமலை அதிரடி!

”சீமான் விட்ட சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன்; 2024 தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது” என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர், இதைத் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்மையில் பேசுகையில், அண்ணாமலையை எதிர்த்து தான் போட்டியிடத் தயார் என்றும் அப்படி பா.ஜ.க. போட்டியிட்டு அவர் தன்னைவிட ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாகப் பெறமுடியுமா என்று சவாலாகக் கூறியிருந்தார்.

அதுகுறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த சவாலை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் சீமான் கூறியதைவிட அதிகமாக, 30 சதவீதம் வாக்குகளை தான் பெறமுடியும் என்றும் அவர் பதிலளித்தார்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது என்றும் அண்ணாமலை கூறினார்.

நாற்பது தொகுதிகளிலும் நா.த.க. தனித்துப் போட்டியிடுகிறது; பா.ஜ.க.வும் இப்படி போட்டியிடுமா என்ற சீமானின் கேள்விக்கு பதிலளித்த அவர், ”பா.ஜ.க. தலைமையின் கருத்தும் என் கருத்தும் உங்களுக்குத் தெரியும்; அவர் தனியாக நிற்பதற்குக் காரணம் யாரும் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை; அப்படி நிற்பது கொள்கை அல்ல; பாஜக தலைமையில் 25 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பெரிய கூட்டணி அமைத்துவருகிறது; வாஜ்பாய் காலத்திலிருந்து இன்றுவரை பலவித கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்திருக்கிறது. நாங்கள் எப்படி தனியாகப் போகச் சொல்லமுடியும்? சீமான் சினிமா நடிகராக இருந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணி வந்துவிட்டது. ” என்றார்.

”சீமானுடைய நிலை என்ன, மத்தியில் ஆட்சியில் இருக்கிறதா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறதா, கொள்கை என்ன? தேர்தல் என வரும்போது மக்கள் அதைப் பார்த்து வாக்களிப்பதில்லை; எங்கள் தொண்டனே இந்த சவாலை ஏற்றுக்கொள்வான்; தனிமனித அடிப்படையில் பல இடங்களில் அவர் பேசுவதை ஆதரித்திருக்கிறேன். கட்சி முரண்பாடுகள் இருந்தாலும் அவரின் பேச்சு இன்று வேண்டும்.”என்றும் அண்ணாமலை கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com