வேங்கைவயல்
வேங்கைவயல்

வேங்கைவயல் தேர்தல் புறக்கணிப்பு- ஸ்டாலினைச் சாடும் அண்ணாமலை!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்த விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த ஊர் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில அரசையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் குறைகூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள கருத்து:

“ ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கண்துடைப்பு விசாரணை நடத்தி, கிட்டத்தட்ட அந்த சம்பவத்தைப் பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க முயற்சித்து வருகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, வேங்கைவயல் மக்கள், தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

வெறும் வாய்வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலும், கையாலாகாத்தனமுமே இதற்கு ஒரே காரணம். வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும், அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறக் கூட மனமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது?

வாக்களிப்பது குடிமக்களின் ஜனநாயக உரிமை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிக்கவிருப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருப்பது, மிகவும் வருத்தத்திற்குரியது. வேங்கைவயல் மக்கள், மாற்றத்திற்காக வாக்களிக்க முன்வர வேண்டும். தங்கள் வாக்குகளின் வலிமையை திமுக அரசுக்கு உணர்த்துவதுதான் உண்மையான பதிலடியாக இருக்கும்.” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com