“டீ-யையும் காபியை ஒன்றாக கலக்க முடியாது..” பாஜக - தவெக கூட்டணி குறித்து அண்ணாமலை கருத்து!

அண்ணாமலை
அண்ணாமலை
Published on

என்னை பொறுத்தவரை டீ-யையும் காபியை ஒன்றாக கலக்க முடியாது.. அதுபோல் தவெக மற்றும் பாஜக கூட்டணி அமையாது என்று பாஜக நிர்வாகி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே என்டிஏ கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக பேசப்பட்டு வருகிறது. விஜய்க்கு 50 தொகுதிகள் வரை கொடுக்க பாஜக தயாராக இருப்பதாகவும், தேர்தலில் வென்றால் துணை முதலமைச்சர் பதவி அளிக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

அரசியல் ரீதியாகவும், சொந்த வாழ்க்கையிலும் விஜய் பின்னடைவை சந்தித்து வருகிறார். ஆட்சியில் பங்கு என்று விஜய் அறிவித்துள்ள போதும், இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியில் இணைய தயாராக இல்லை.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, விஜய்யை பொறுத்தவரை ஏற்கனவே சொல்லிவிட்டோம். விஜய்யுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டார். டீயும், காபியும் கலக்காது என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். ஏனென்றால் இரு கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறு..

என்டிஏ கூட்டணி வலிமையாக இருக்கிறது. தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திருச்சியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. ஏற்கனவே மதுராந்தகம், மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டம் என்டிஏ கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக அமையும்.

அதேபோல் வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் தொடர்பாக விவாதம் நடக்கும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தொடர்பாக நிச்சயமாக விவாதம் நடக்கும். அதேபோல் சிலிண்டரை பொறுத்தவரை பெரும்பாலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. ஈரான் போரை தொடங்கிய பின் ஹார்முஸ் நீரணை வழிப்பாதையை மூடிவிட்டது. இதனால் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. பெட்ரோலியம் பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டாலும், சிலிண்டர் எரிவாயு அதிகமாக சவுதியில் இருந்தே வருகிறது. ஹோட்டல்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்த அரசியலும் இல்லை. அவர்கள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக அசாதாரணமான சூழல் தான்.

இப்போதைக்கு வீட்டு உபயோக சிலிண்டர் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் இடைஞ்சல் இல்லாமல் வர வேண்டும். விரைவாக இது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். 60% பெட்ரோலியம் பொருட்கள் இறக்குமதி செய்து வருகிறோம். அதனால் விரைவில் போர் சூழல் இயல்புக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com