அன்னப்பூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ விவகாரத்தில் சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் சதீஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் பிரச்னை அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக-வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மறுபக்கம் பாஜக-வின் உள்கட்சி பிரச்னையும் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக-வின் கோவை, சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் மற்றும் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோரின் ஒப்புதலுடன் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டல தலைவராக செயல்பட்டு வந்த ஆர்.சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியினுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பரவி வைரலான நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று மன்னிப்புக் கேட்டிருந்தார்.
இந்நிலையில், சிங்காநல்லூர் மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ், ‘கோவை மாவட்ட நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள்தான் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்.’ என வாட்ஸப் குழுவில் பதிவிட்டுள்ளார். இது கட்சியினரிடையே பஞ்சாயத்தை கிளப்ப, அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உத்தரவின் அடிப்படையில் சதீஷை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.