இதுவரை பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்கலையா... இதைப் படிங்க!
குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் இன்னும் ஏராளமானவர்கள் பெயர் சேர்க்காமல் இருந்துவருகிறார்கள். அப்படியானவர்களுக்கு அரசாங்கம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக, தமிழ்நாட்டில் சென்னை முதலிய மாநகராட்சிகளில் குழந்தை பிறந்ததும் மருத்துவமனை என்றால் அதன் மூலமாக உள்ளாட்சி அமைப்பின் பிறப்பு- இறப்புப் பதிவாளருக்குத் தெரிவிக்கப்படும். மருத்துவமனையில் பிரசவிக்கப்படாத குழந்தைகளுக்கு அந்தந்தப் பெற்றோரே போய் தகவல் தெரிவிக்கவேண்டும்.
இதில், முன்னர் உடனடியாக குழந்தையின் பெயரைச் சேர்க்காமலேயே பிறப்புச் சான்று வழங்கப்படும். பெற்றோரின் பெயர் மட்டும் இருக்கும் தற்காலிகச் சான்றாக இருக்கும். பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தையின் பெயரையும் சேர்த்து சான்றிதழ் வழங்கப்படும்.
ஆனாலும் பெயரைச் சேர்க்காமல் விட்டவர்களின் பட்டியல் மிகப் பெரியது. அப்படியானவர்களுக்காக 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் பிறந்த 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர்வரை முதல் முறையாக பெயர்சேர்க்க அவகாசம் அளிக்கப்பட்டது.
மீண்டும் ஒரு முறை 2019 டிசம்பர்வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக இப்போது எதிர்வரும் டிசம்பர் கடைசிவரை குழந்தையின் பெயரைச் சான்றிதழில் இணைப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநரும் பிறப்பு- இறப்புப் பதிவாளருமான டாக்டர் செல்வவிநாயகம் இதுகுறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். பள்ளிகள், தொழில் பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கல்லூரிகளில் பயிலும் அனைவரின் பிறப்புச் சான்றிதழ்களிலும் பெயர் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அந்தந்தத் துறைகளின் மாவட்டத் தலைமை அதிகாரிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.