ஸ்பாரோ விருது பெறும் நசீமுன்னிஸா, வறீதையா கான்ஸ்தந்தின், திருக்குமரன் கணேசன்
ஸ்பாரோ விருது பெறும் நசீமுன்னிஸா, வறீதையா கான்ஸ்தந்தின், திருக்குமரன் கணேசன்

வறீதையா உட்பட 4 பேருக்கு ஸ்பாரோ இலக்கிய விருது அறிவிப்பு!

ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் ஆர். தியாகராஜன் நிறுவிய ஸ்பாரோ இலக்கிய விருது- 2023 அறிவிக்கப்பட்டுள்ளது. நசீமுன்னிஸா, வறீதையா கான்ஸ்தந்தின், திருக்குமரன் கணேசன் ஆகியோர் இந்த ஆண்டுக்கான விருதை பெறுகின்றனர்.

இது தொடர்பாக ஸ்பாரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

“ ஸ்பாரோ-ஆர். தியாகராஜன் இலக்கிய விருது 2023 தேர்வுக் குழு இந்த ஆண்டு சுயசரிதை, வாழ்க்கை வரலாறு வகைமையைத் தேர்ந்தெடுத்தது. ஸ்பாரோ இலக்கிய விருதுகள் தமிழில் எழுதும் ஒரு பெண், ஓர் ஆண் எழுத்தாளருக்கும் தமிழ் அல்லாத வேறொரு மொழியில் எழுதும் ஒரு பெண் அல்லது ஓர் ஆண் எழுத்தாளருக்கும் தரப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்பாரோ-ஆர்.தியாகராஜன் இலக்கிய விருது தேர்வுக் குழுவில் டி. ஐ. அரவிந்தன், தி. பரமேசுவரி, அம்பை மூவரும் இருந்தனர். கவிஞரும் எழுத்தாளருமான சுகுமாரன் எப்போதும்போல் ஆலோசகராக இருந்தார். இந்த ஆண்டு தமிழில் இரு ஆண் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்தோம். விருதை அவர்கள் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. விருதுக்கான இறுதி முடிவுகளை டி. ஐ. அரவிந்தன், தி. பரமேசுவரி, அம்பை மூவருமான தேர்வுக் குழு தீர்மானித்தது.

இந்த ஆண்டு ஸ்பாரோ இலக்கிய விருது பெறும் தமிழ் எழுத்தாளர்கள் ‘அன்புள்ள அனீஸ்’ (கோதை பதிப்பகம் 2019), ’கையறுநதி’ (கடல்வெளி வெளியீடு, 2022), ’கறிவிருந்தும் கவுளி வெற்றிலையும் : சாதியினாற் சுட்ட வடு’ (காலச்சுவடு, 2022) நூல்களை எழுதிய முறையே நசீமுன்னிஸா, வறீதையா கான்ஸ்தந்தின், திருக்குமரன் கணேசன் ஆகியோர்; தமிழல்லாத மொழியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ‘நாளே இன்னு காதிதே’ (நாளை இன்னும் காத்திருக்கிறது) (பாரதி ப்ரகாஷனா, 2021) கன்னட நூலை எழுதிய எழுத்தாளர் சியாமளா மாதவ்.

Office

” ’அன்புள்ள அனீஸ்’ குடும்பச் சரித்திரத்தையும் சுய வரலாற்றையும் ஒரு பாட்டி தன் பேரனுக்குக் கூறும் நூல். மிகவும் உருக்கமாகவும் விவரமாகவும் எழுதப்பட்ட அருமையான நூல். அதிகக் கவனம் பெறாதது.

நசீமுன்னிஸா குடும்பத் தலைவி. எழுத்தாளர் இல்லை. 70 வயதைக் கடந்த நிலையில் தன் மகனை இழந்த போது தன் முன்னோர்கள் குறித்து எப்போதும் நினைவில் இருத்தவும் தன் குழந்தைகளுக்குக் கூறவும் அவர்கள் குடும்ப வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் , பண்பாடு இவற்றைக் குறித்துத் தன் பேரன் அனீஸுக்கு தபாலில் போடாத கடிதங்களை எழுத ஆரம்பிக்கிறார். தான் அறிந்துகொண்ட இஸ்லாத்தைப் பற்றியும் அதன் போதனைகளையும் வழிகளையும் அவன் தலைமுறைக்குக் கூறுவதும் அவர் இன்னொரு நோக்கமாக இருந்தது. எண்பது பக்க நோட்புக்கில் அவர் எழுதியதை குடும்பம், நண்பர்கள் இவர்கள் வற்புறுத்தலின் மேல் நூலாக வெளியிட இசைந்து பின் வெளிவந்த நூல் இது.

’கையறுநதி’ மன நிலை பாதிக்கப்பட்ட மகளின் தந்தை தன் வாழ்க்கையையும் தன் மகளுடன் வாழும் வாழ்க்கையையும் மிகவும் நேர்மையுடனும் அன்புடனும் எழுதியிருக்கும் நெகிழ்வூட்டும் நூல்.

கன்யாகுமரியின் பள்ளம் கிராமத்திலிருந்து வரும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் கடல்புற மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆய்வாளர், போராளி, எழுத்தாளர், பதிப்பாசிரியர், பதிப்பாளர், கடலோர வாழ்க்கை வளங்களின் பயன்பாட்டின் அரசியல், பங்கேற்பு வளர்ச்சி இவற்றைக் குறித்த பயிற்சி அளிப்பவர், ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர், பத்தியாளர் மற்றும் மன நல ஆலோசகர் எனப் பல வகைகளில் செயல்படுபவர். முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள், ஆறு பரப்புரை நூல்கள் இவற்றை வெளியிட்டிருக்கிறார். நெய்தல்வெளி, கடல்வெளி என்ற இரு பதிப்பகங்களை உருவாக்கி அவற்றின் மூலம் பள்ளம்துறை சூழலியல், கடலோடிகள் பற்றி 35 நூல்களைப் பதிப்பித்தவர். தூத்தூர் புனித யூதா கல்லூரியில் விலங்கியல் துறைப் பேராசிரியராக 1982ஆம் ஆண்டுமுதல்பணிபுரிந்து துறைத்தலைவராகி ஓய்வு பெற்றார். பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.

’கறிவிருந்தும் கவுளி வெற்றிலையும்:சாதியினாற் சுட்ட வடு’ சாதியினால் ஏற்பட்ட வலிகூடிய அனுபவங்களையும் வடுக்களையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசி, மனத்தை வெகுவாகப் பாதிக்கும் நூல்.

திருக்குமரன் கணேசன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பனந்தாள் அருகே உள்ள திருலோக்கி எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள எம். ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்கம் (D.F. Tech.) பயின்றவர். தற்சமயம் அதே கல்லுரியில் இயக்குதல் துறையில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டத்துடன் சமூகவியலிலும்முதுகலை பட்டம் பெற்றவர். தற்பொழுதுதஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ‘திரை மாற்றுத்திரைக் காட்சிப்படுத்தும் தமிழரும் அடையாள அரசியலும்’ என்ற பொருண்மையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நிலவெறிக்கும் இரவுகளில்’ 2007இல் வெளிவந்தது. . இரண்டு திரைக்கதைகளை எழுதி முடித்து தயாரிப்பாளர்கள் தேடலில் இருக்கிறார்.

சியாமளா மாதவின் ‘நாளே இன்னு காதிதே’ (நாளை இன்னும் காத்திருக்கிறது) சுய சரிதையாக இருந்தாலும் குடும்பத் தறுவாயில் தன்னை இருத்தி, அந்தப் பிரதேசத்தின் சமூக, பண்பாட்டு வரலாற்றையும் தன் வரலாற்றுடன் இணைத்துக் கூறும் அபூர்வமான நூல்.” என்று ஸ்பாரோ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com