ரோட்டைக் காணோம்... முன்னாள் அமைச்சர் எ.வ வேலு உட்பட 11 பேர் மீது ஊழல் வழக்கு!

E.V. Velu
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு
Published on

சாலைப் பணிகளில் முறைகேடு செய்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உட்பட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

கரூரில் சாலையை அமைத்ததாகக் கணக்கில் மட்டும் காட்டி ரூ.3.23 கோடி ஊழல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீதும், அதில் சம்பந்தப்பட்டிருந்த பொறியாளர்கள் மீதும் 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்துள்ள இந்த வழக்கில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பட்டியலில் ஏ1 ஆக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருடன் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த முன்னாள், தற்போது பதவியில் உள்ள பொறியாளர்கள், கணக்காளர்கள் ஆகியோர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம், திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் தொடர்புடைய இடங்கள் என 13 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை மேற்கொண்டு வருகின்றது.

இந்த சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களை வைத்துதான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com