அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா
அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் வந்த அன்வர் ராஜா கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் அன்வர் ராஜா.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அன்வர் ராஜா அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, "ஓராண்டுக்கு முன்னர் நீக்கப்பட்டேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறு சறுக்கலுக்குப் பின்னர் நான் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் நான் கட்சியின் அனைவருடனும் தொடர்பில் தான் இருந்தேன்.

"ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்" என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.” என்று கூறினார்.

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த 2001 முதல் 2006 வரை அமைச்சராக இருந்த அன்வர் ராஜா ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படும் நிலையில், அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com