அப்பாவு- ஆர்.என்.இரவி
அப்பாவு- ஆர்.என்.இரவி

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் திருத்தமின்றி நிறைவேற்றப்படும்- அப்பாவு!

ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை எந்தவிதத் திருத்தமும் இல்லாமல் அப்படியே நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் இரவி தனக்கு அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாகளை இன்று அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் அந்த மசோதாகளை மீண்டும் நிறைவேற்றுவதற்காக, வரும் 18ஆம் தேதி சனிக்கிழமையன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஊடகத்தினரிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் எந்தவிதத் திருத்தமும் செய்யாமல் பழையபடியே அவை தாக்கல்செய்யப்பட்டு அவையில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

அவை உடனடியாக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, அரசாங்கத்துக்கும் ஆளுநர் இரவிக்கும் இடையிலான உரசலில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஆளுநரின் போக்கு குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கவலைதெரிவித்தார். ஆளுநர் தனக்கு வரும் மசோதாகளின் மீது ஏதோ ஒரு முடிவை எடுக்கவேண்டுமே தவிர, காலவரையறை இல்லாமல் கிடப்பில் போடக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் 20ஆம் தேதியன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, மைய அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் தன்னிடமிருந்த மசோதாகளை அரசுக்கு திருப்பிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com