நீட் முடிவு வரவில்லை... மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடங்கியது!

DMER
மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககம்
Published on

இளநிலை மருத்துவ, பல் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. மூன்று அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்கள், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,950 இடங்கள் உள்ளன. இதில், மொத்த இடங்களில் 15 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50 சதவீதம்  மாநில அரசுக்கும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் ஒதுக்கப்படுகிறது.

அரசு, தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் தமிழ்நாட்டு அரசால் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதளப் பதிவு தொடங்கியுள்ளது.

ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும், www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் எனவும் மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் மறுதேர்வு முடிவு வெளியாவதற்கு முன்னரே மருத்துவ- பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com