
”கனிமவளத் துறையில் அரசுக்கு ரூ 20,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத குவாரி மாபியாக்களுக்காக கடந்த தி.மு.க. ஆட்சியில் தேர்தலுக்குமுன் கொண்டுவரப்பட்ட ஒரேநேர ஒழுங்கமைப்புத் திட்டத்தைத் திரும்பப்பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.” என்று அறப்போர் இயக்கம் வரவேற்றுள்ளது.
”இந்த அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தது. மேலும் அமைச்சர் பிரபுவை ஜூன் 3 ஆம் தேதி நேரில் சந்தித்து இதைத் திரும்பப்பெறுவதற்கான அவசியம் குறித்து தெரிவித்து மனு வழங்கினோம். அவரும் இதன்மீது ஆலோசிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் ஏபல் மூர்த்தி, சிலர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு இதைத் திரும்பப்பெற முடிவெடுத்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சரியானது.
விரைவில் அரசாணை திரும்பப் பெற வேண்டும். அடுத்ததாக சட்டவிரோத குவாரி அதிபர்கள் திருடிய கற்களுக்கான அபராதத்தைத் தொடுத்து அரசு கஜானாவை நிரப்ப வேண்டும். மேலும், சட்டவிரோத கல்குவாரி மாபியாக்கள் மீது வழக்குகளும் தொடுக்கப்பட வேண்டும்.” என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.