ஊழல் வியாதிகளை பரப்பும் வேலையில் ஈடுபடுவது நியாயமா?

CM Vijay
முதல்வர் விஜய்
Published on: 

ரூபாய் 50 லட்சத்திற்கும் குறைவாக மதிப்புள்ள டெண்டர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்று த.வெ.க. அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரையில், த.வெ.க.வின் இரண்டாம் கட்ட மாணவர் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், "ஊழல் என்பது ஒரு நீண்ட கால நோய் போன்றது. அதைச் சரிசெய்ய முடியுமா என்று சிலர் கேட்பார்கள். சரிசெய்ய முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம் இல்லையா?" என்று பேசினார்.

இதனைக் குறிப்பிட்டு அறப்போர் இயக்கம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"ஊழல் என்னும் வியாதியைத் தடுப்பதற்கான மருந்து, தீர்ப்பதற்கான மருந்து வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை. ரூபாய் 50 லட்சம் கீழே வெளிப்படையான டெண்டர்களை போடாமல் மறைத்து வைத்து டெண்டர் போடுங்கள் என்ற நிதித்துறை செயலரின் சுற்றறிக்கை வியாதியை வளர்க்கும்.

அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்பதே வியாதிகளை தீர்க்க நம் கண் முன்னே இருக்கும் அறிவியல் பூர்வமான மருந்து.

ஊழல் வியாதிகளை தடுக்க, தீர்க்க சொற்கள் அளவில் பேசிவிட்டு செயலளவில் வியாதிகளை பரப்பும் வேலையில் உங்கள் அரசு ஈடுபடுவது நியாயமா முதல்வரே?? சுற்றறிக்கையை ரத்து செய்யுங்கள். வெளிப்படையான டெண்டர்களை உறுதி செய்யுங்கள்." என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட பாடல் ஒன்று இந்தியாவில் மட்டும் சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, த.வெ.க. அரசின் செயல்பாடு பேச்சு சுதந்திரத்திற்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram