
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலான மதுரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற ரயில்வே துறை ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விவரித்தார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளதாவது:
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற ரயில்வே துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட மதுரையில் மேற்கொள்ள வேண்டிய விரிவாக்கப் பணிகள் , மதுரை சார்ந்த கோரிக்கைகள் …
மதுரையை மையப்படுத்திய கோரிக்கைகள்;
மதுரை கூடல் நகரில் மெமு பணிமனை தேவை
தென் தமிழகத்தின் தலைநகராக, நுழைவு வாயிலாக விளங்கும் மதுரைக்கு அருகாமை நகரங்களிலிருந்து வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஏராளமான மக்கள் தினந்தோறும் வருகின்றனர். ஆனால், மதுரைக் கோட்டத்தின் தலைமையிடமாக இருந்தாலும், வெறும் 5 பயணிகள் இரயில் மட்டுமே இங்கு இயக்கப்படுகிறது… மாறாக, கோவை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி கோட்டங்களில் தலா 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து பயணிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, மதுரையிலிருந்து மேலும் 5 பயணிகள் ரயில்களை பின்வரும் வழித்தடங்களில் இயக்க பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
• மதுரை – திருநெல்வேலி – திருச்செந்தூர்
• மதுரை – தூத்துக்குடி
• மதுரை வழியாக போடிநாயக்கனூர் – பழனி
• மானாமதுரை, காரைக்குடி வழியாக மதுரை – திருச்சிராப்பள்ளி (மெமு)
• மதுரை – மானாமதுரை – அருப்புக்கோட்டை – விருதுநகர் – திருமங்கலம் – திருப்பரங்குன்றம் – மதுரை வட்ட ரயில் (மெமு)
இவற்றை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு குறுகிய கால நடவடிக்கையாகும்.
எதிர்கால நலன் கருதி நீண்ட கால நடவடிக்கை பின்வருமாறு;
விருதுநகர், சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மானாமதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம், திண்டுக்கல், பழனி, போடிநாயக்கனூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு மதுரையை மையமாகக் கொண்ட மெமு இரயில்கள் இயக்கப்பட ஏற்றவாறு, மதுரை கூடல் நகரில் மெமு பணிமனை அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மதுரையில் அமையும் மெமு பணிமனை பெருவாய்ப்பாக அமையும்.
புதிய ரயில் பற்றிய கோரிக்கைகள் :
• ஏற்கனவே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதுரை வழியாக ராமேஸ்வரம் – மங்களூர் அதிவிரைவு ரயிலை விரைவாக இயக்க வேண்டும்..இந்த இரயில் வட-கேரளா மற்றும் கொங்கன் பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்குகிறது.
• மதுரை – அகமதாபாத் இடையே வாரம் இருமுறை அதிவிரைவு ரயில்.
• மதுரை – ஷாலிமார் இடையே வாரம் இருமுறை அதிவிரைவு ரயில்.
• மதுரை வழியாக ராமேஸ்வரம் – ஸ்ரீநகர் வரை அமிர்த பாரத் விரைவு ரயில்.
• திப்ருகர் – மதுரை வரை வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில்.
• செங்கோட்டை, கொல்லம் வழியாக மதுரை – எல்டிடி மும்பை வரை வாரம் இருமுறை விரைவு இரயில்.
• மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக தூத்துக்குடி – எல்டிடி மும்பை வாரம் இருமுறை விரைவு ரயில்.
• மதுரை, திருவண்ணாமலை வழியாக ராமேஸ்வரம் – திருப்பதி வாரம் மூன்று முறை இன்டர்சிட்டி விரைவு ரயில்.
• தென்காசி, மதுரை, ஓசூர் வழியாக திருநெல்வேலி – பெங்களூரு தினசரி இரவு நேர விரைவு ரயில்.
• திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, மதுரை வழியாக ஈரோடு – ராமேஸ்வரம் இரவு நேர விரைவு ரயில்.
• மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக ஈரோடு – கொல்லம் விரைவு ரயில்.
• தூத்துக்குடி – தாம்பரம் வழியாக காரைக்குடி இரவு நேர விரைவு ரயில்.
புதிய ரயில் பாதைகள்:
• மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை (ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது) விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.
• மதுரை – மேலூர் – காரைக்குடி – புதுக்கோட்டை – தஞ்சாவூர் புதிய இரயில் பாதை. (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
• மதுரை – மேலூர் – திருச்சிராப்பள்ளி விராலிமலை வழியாக புதிய ரயில் பாதை (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
• சிவகங்கை வழியாக மதுரை – தொண்டி புதிய ரயில் பாதை (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
• ஈரோடு – பழனி புதிய இரயில் பாதை (அங்கீகரிக்கப்பட்டது ஆனால் முடக்கப்பட்டுள்ளது)
• தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை – மன்னார்குடி புதிய ரயில் பாதை.
• தஞ்சாவூர் – மயிலாடுதுறை – விழுப்புரம் பிரதான ரயில் பாதை இரட்டிப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்..இது தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில்களை இயக்குவதற்கு இன்றியமையாததாக அமையும்.
நீட்டிப்பு கோரிக்கைகள்:
• வண்டி எண் – 22497/22498 – ஸ்ரீ கங்காநகர் – திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
• வண்டி எண் – 20481/20482 – ஜோத்பூர் – திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். தெற்கு ரயில்வே முன்பு மதுரை – பகத் கி கோதி என்ற வாராந்திர சிறப்பு இரயிலை இயக்கியது, பின்னர் அது வாரம் ஐந்து முறை சென்னை – பகத் கி கோதி வழக்கமான ரயிலாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போது மதுரை – ஜோத்பூருக்கு எந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. இந்த ரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டால் தடைப்பட்ட ஜோத்பூர் இணைப்பு மீண்டும் கிடைக்கும்.
• வண்டி எண் – 22611/22612 – புதிய ஜல்பைகுரி – எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்
வாராந்திர விரைவு ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். இந்த பழைய திட்டங்களை மறுபரிசீலனை செய்வது மூலம் தென் தமிழகத்திலிருந்து ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளுக்கான இணைப்பு மேம்படுத்தப்படும்.
• வண்டி எண் – 12375/12376 – ஜசித் – தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் மதுரை வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
• வண்டி எண் – 12611/12612 – ஹஸ்ரத் நிஜாமுதீன் – எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் கரிப் ரத் விரைவு ரயில் மதுரை வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இது நமது தேசிய தலைநகர் டெல்லிக்கு கூடுதல் இணைப்பை அதிகரிக்கும்.
• வண்டி எண் – 22475/22476 – ஹிசார் – கோவை வாராந்திர முழு குளிர்சாதன வசதி கொண்ட ரயிலை திருப்பூர் – ஈரோடு – கரூர் – திண்டுக்கல் வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும். இந்த நீட்டிப்பு மங்களூர், கோவா, மும்பை மற்றும் குஜராத்திற்கான தொடர்பை மேம்படுத்த உதவும்.
ரயில்களின் மேம்பாடு :
• மதுரை – சென்னை மஹால் அதிவிரைவு ரயிலை வாரத்திற்கு இருமுறை இயக்குவதிலிருந்து அதிகரித்து தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
• காட்பாடி வழியாக இயக்கப்படும் போடிநாயக்கனூர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயிலை வாரத்திற்கு மூன்று முறை இயக்குவதிலிருந்து அதிகரித்து தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
• இராமேஸ்வரம் – திருப்பதி அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
• இராமேஸ்வரம் – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உற்பத்திப் பொருட்களை இலகுவாக ஏற்றுமதி-இறக்குமதி செய்வதற்கும் ஏதுவாக மதுரை கூடல் நகரில் ரோரோ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவைகள் தவிர தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் பெருமளவு தூத்துக்குடி துறைமுகத்தை சார்ந்துள்ளன. எனவே எண்ணற்ற சரக்கு வண்டிகள் மதுரை ரயில் நிலையத்தை கடக்க வேண்டிய தேவை இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி உருவாகிறது. புதிய ரயில்களை இயக்கவும் வழியில்லாத நிலை ஏற்படுகிறது எனவே சரக்கு வண்டிக்கான பைபாஸ் வழித்தடம் ஒன்று மதுரைக்கு அவசியம் தேவைப்படுகிறது.
சோழவந்தான் துவங்கி செவரக்கோட்டை வரையிலான புதிய பைபாஸ் வழித்தடம் அமைக்க விரிவான திட்ட ஆலோசனையை உரிய மாதிரி வரைபடத்துடன் வழங்கியுள்ளேன்.” இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.