ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காங் நிர்வாகி கைது!
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முதன்மை செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் என்பர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள அருள் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முதன்மை செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனான இவர், சென்னை புறநகர்ப் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஆம்ஸ்ட்ராங்கும் இந்த தொழில் ஈடுபட்டு வந்தததால் இருவருக்கும் இடையே ஏதேனும் முன்பகை இருந்ததா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஸ்வத்தாமன் கைது செய்தி வெளியான உடனேயே அவரை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமாக ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகியும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.