பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் கட்டி வந்த புதிய வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டு, விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பி.வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
6 மாதத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அரசியல் மற்றும் ஊடக தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.