ஆம்ஸ்ட்ராங்கை  கொலை செய்துவிட்டு தப்பியோடும் கொலையாளிகள்
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடும் கொலையாளிகள்

ஐந்து நிமிடத்தில் முடிந்த ஆம்ஸ்ட்ராங் கொலை! - பார்த்தவர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாட்டையே அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை எப்படி நிகழ்ந்தது என்பதை நேரில் பார்த்தவர்கள் சொல்வது நெஞ்சை பதற வைக்கிறது.

அயனாவரத்தில் மனைவி, மகளுடன் வசித்து வந்த தமிழ்நாடு பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஒருவாரமாக தனது கட்சி அலுவலகமும் பூர்வீக வீடும் உள்ள பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவிற்கு மாலை 3:30 மணிக்கே சென்றுவிடுவாராம். அங்கு கேரம் போர்டு விளையாடுவது, ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்துவது என இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தான் புதிதாக கட்டிவரும் வீட்டினை பார்வையிட்ட ஆம்ஸ்ட்ராங், அவருடைய அண்ணன் வீரமணி, நண்பர் பாலாஜியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அங்கு, உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்திருந்த 3 பேர் செல்போனில் கூகுள் மேப்பை பார்ப்பது போல் நடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டுள்ளனர்.

அப்போது, பேப்பர் மில் சாலையிலிருந்து வந்த மூன்று பேர், ஆம்ஸ்ட்ராங்கிடம் சென்று அவரை ‘அண்ணா’ என அழைத்துள்ளனர். அவர்களிடம் பேசுவதற்காக திரும்பியபோது, அவரை வெட்டத் தொடங்க, அவர்களுடன் உணவு டெலிவரி உடை அணிந்திருந்த மூன்று பேரும் சேர்ந்துகொண்டனர்.

முதல் வெட்டு அவரது இடது கன்னத்தில் விழ, அடுத்த வெட்டு இடது கணுக்காலில் விழுந்ததுள்ளது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதுகை சரமாரியாக வெட்டியதோடு, அவர் முழுமையாக செயலிழந்த பிறகே கொலையாளிகள் அங்கிருந்து ஓடியுள்ளனர். இந்த கொலை சம்பவம் ஐந்தே நிமிடத்தில் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங்குடன் பேசிக் கொண்டிருந்த வீரமணி, பாலாணி, ஆட்டோ ஓட்டுநர் அப்துல் கனி ஆகியோரையும் தலை, தேள்பட்டை, கைகளில் வெட்டியுள்ளனர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் அங்கு வந்தபோது, கொலையாளிகள் 9 பேரும் இருசக்கரத்தில் ஏறி தப்பிவிட்டதாக கூறுகின்றனர்.

சமயம் பார்த்து காத்திருந்த கொலையாளிகள்

சம்பவம் நடந்த இடத்தில், கட்டுமான பணிகள் நடப்பதால் அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவு ஜன்னல்களை மூடியே வைத்திருந்துள்ளனர். அதேபோல், அங்கு கட்டட வேலை செய்த தொழிலாளர்களும் 6 மணிக்குக் கிளம்பிவிடுவார்கள்.

சம்பவத்தன்று, ஆம்ஸ்ட்ராங் தனது கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்ததாகவும், கார் சில மீட்டர் தூரத்தில் இருந்ததாகவும் கூறுகின்றனர். ஒருவேளை, ஆம்ஸ்ட்ராங் துப்பாகி வைத்திருந்தால், அவர் மீது நாட்டு வெடிக் குண்டு வீசி கொலை செய்வதற்காக  கொலையாளிகள் நாட்டு வெடிக்குண்டு வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

குற்றவாளிகளில் ஒருவரான திருமலை என்ற ஆட்டோ ஓட்டுநரே ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளைக் கவனித்து கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com