
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5ஆம் தேதி நள்ளிரவு, மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரைச் சேர்ந்த அழகர் ஆகிய இருவர் அடையாளம் தெரியாத நபர்களால் பட்டாக்கத்தியால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆகாஷ் டெலிசன் (24) என்ற இளைஞரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, மேலபசலை மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து அவர் தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆகாஷிற்கு காலில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மானாமதுரை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் மதுரை சிறைக்கு அழைத்து சென்றபோது திடீரென ஆகாஷ் டெலிசனுக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.
இந்நிலையில், ஆகாஷ் டெலிசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். விசாரணையின் போது போலீசார் அவரை கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தியதே உயிரிழப்பிற்கு காரணம் என குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இளைஞரின் உயிரிழப்பால் மானாமதுரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.