எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டணி தொடர்பாக வி.பி.துரைசாமியிடமே கேளுங்கள்: எடப்பாடி பழனிசாமி பதில்!

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக வி.பி.துரைசாமி கூறிய கருத்துக்கு ”அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் இன்று புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்,”ஏற்கெனவே நான் தெளிவாக கூறிவிட்டேன், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிவிட்டது என்று. வி.பி.துரைசாமி சொல்வதற்கு நான் என்ன கருத்துச் சொல்ல முடியும்? எங்களுடைய கருத்து இதுதான். இரண்டு கோடி தொண்டர்களின் முடிவை தீர்மானமாக நிறைவேற்றி அறிவித்துவிட்டோம். ஊடகங்கள் தினந்தோறும் இதே கேள்வியைக் கேட்டால், என்ன பதில் சொல்ல முடியும்? கூட்டணி குறித்து வி.பி.துரைசாமி சொன்னது குறித்து அவரிடம்தான் நீங்கள் விளக்கம் கேட்க வேண்டும். எங்கள் கட்சி குறித்துத்தான் நாங்கள் பதில் சொல்ல முடியும்.

அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றிபெறும். அ.தி.மு.க. கூட்டணியில் சேர உள்ள கட்சிகள் குறித்துப் பொறுத்திருந்து பாருங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் பல தொகுதிகளில் தோல்வி அடைந்தோம்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் வெளியிட்டனர். அதில் பத்து சதவீத அறிவிப்புக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும் போது 95% வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகிறார்.

தி.மு.க. அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா? தென்னை விவசாயிகளின் நலன் கருதி, ஜெயராமன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அதன் தொடர்ச்சியாகவே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்கள். வேறு எந்த காரணமும் கிடையாது. கூட்டணிக்கும் அதற்கும் சம்மந்தம் கிடையாது. ஏற்கெனவே கூட்டணி தொடர்பான முடிவு எடுத்தாகிவிட்டது.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com