
உலக நாடுகள் அனைத்தும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, போர் அல்ல, அமைதியே மனிதக்குலத்தின் பாதை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டுகிறோம் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயரிய தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் பயங்கரவாத தாக்குதல், ஒரு சுயாட்சி நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, சர்வதேச சட்டங்களையும் ஐ.நா. சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளையும் மீறும் ஆபத்தான முன்மாதிரியாகும். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைமை அமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல், பிராந்திய அமைதியைச் சீர்குலைக்கும் செயல் மட்டுமல்ல; அது உலக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இத்தகைய ஒருதலைபட்சமான பயங்கரவாத நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் தீவிர மோதல்களுக்குள் தள்ளக்கூடியவை. பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சிக்கப்பட்ட விவகாரங்கள், இராணுவ தாக்குதலால் ஒருபோதும் தீர்க்கப்படமாட்டாது. போர் என்பது தீர்வாகாது; அது மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்
எனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகம் அவசரமாகத் தலையிட்டு, மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சினைகள் அனைத்தும் தூதரக வழி மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டம் கூட்டி, பிராந்திய அமைதியை உறுதி செய்ய வேண்டும். ஒரு சுயாட்சி நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, போர் அல்ல, அமைதியே மனிதக்குலத்தின் பாதை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.