சு.வேணுகோபாலுக்கு விஜயா வாசகர் வட்ட விருது!

சு . வேணுகோபால்
சு . வேணுகோபால்
Published on

கோவை விஜயா பதிப்பகத்தின், 'விஜயா வாசகர் வட்டம்' சார்பில், 2025 ஆம் ஆண்டிற்கான கி.ரா.விருதுக்கு, எழுத்தாளர் திரு சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சாகித்ய அகாடமி விருதுக்கு பெருமை சேர்த்த 'கி.ரா.' வின் நினைவைப் போற்றும் வகையில் கோவை விஜயா பதிப்பகத்தின், விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்பாளிகளுக்கு 'கி.ரா.’ விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. இந்த விருதுத் தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்கி சிறப்பிக்கிறது. 2025 ஆம் ஆண்டிற்கான ‘கி.ரா.’ விருதுக்கு பிரபல எழுத்தாளர் திரு சு.வேணுகோபால் அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

செப்டம்பர் 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை கோவை பீளமேடு, பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் நடைபெறும் இந்த விருதளிப்பு விழாவில், டெல்லி உச்சநீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.

விருதாளரைப் பற்றிய குறிப்பு :

எழுத்தாளர் திரு சு.வேணுகோபால் பேருந்து வசதிகள் இல்லாத இடத்தில் பிறந்து, மேல்நிலைப்பள்ளி வரை பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று படித்தவர். மூர்க்கம் மிக்க வாழ்க்கையிலும் தீவிரமான வாசிப்புப் பழக்கத்தில் மூழ்கிய இவர், 'நுண்வெளி கிரகணங்கள்,' 'கூந்தப்பனை,' 'வலசை,' 'ஆட்டம்,' 'நிலம் என்னும் நல்லாள்' உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்களுடன் சிறுகதை, கட்டுரை என இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

ஏராளமான இலக்கியச் சொற்பொழிவுகளிலும் பங்கேற்று வருகிறார். இலக்கிய நிகழ்வுகளுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்.

கடந்த ஆண்டுகளில் இந்த விருது எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம், எஸ்.வி.ராஜதுரை, நாஞ்சில் நாடன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com