“சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு தவறு இருப்பின் இசைவாணி மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் தெரிவித்துள்ளார்.
பாடகி இசைவாணியால் பாடப்பட்ட 'ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி இந்து அமைப்புகள் புகார்களை அளித்து வருகின்றன.
ஐயப்ப பக்தர்கள் உணர்வை காயப்படுத்தியதாக இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோர் மீது உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. சென்னையிலும் ஒரு சிலர் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பாக பாடப்பட்ட இந்தப் பாடலை வைத்து, தற்போது சபரிமலை சீசன் நேரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். வலதுசாரி யூடிபர் மாரிதாஸ், திரைப்பட இயக்குநர் மோகன். ஜி போன்றவர்கள் இசைவாணியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதே கோரிக்கையை தமிழ்நாடு பா.ஜ.கவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனும் முன்வைத்திருந்தார்.
மேலும், இந்தப் பாடல் தொடர்பான சர்ச்சை கடந்த வாரம் உருவானதிலிருந்தே, இசைவாணிக்கு அவரது மொபைல் போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆபாச செய்திகளும் படங்களும் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனக்குப் பாதுகாப்புக் கோரி மனு அளித்திருப்பதோடு, தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் அளித்துள்ளார் இசைவாணி.
இந்த பாடல் விவகாரத்தில் இசைவாணி மீது நடவடிக்கை பாயுமா பாயாதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். எந்த மதத்தினரும் பிற மதத்தினரை இழிவுப்படுத்துவதை முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார். இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தேன். இது குறித்து நிச்சயம் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தவறு இருப்பின், உறுதியாக இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்கும்.
மதத்தால், இனத்தால், மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க முடியாது.” என்றார்.