கேள்வி கேட்ட பெண்ணைத் தாக்கிய பா.ஜ.க.வினர்
கேள்வி கேட்ட பெண்ணைத் தாக்கிய பா.ஜ.க.வினர்

திருப்பூர்: பெண்ணைத் தாக்கிய கும்பலுக்கு முன்ஜாமின் மறுப்பு!

திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கேள்வி கேட்ட பெண்ணைத் தாக்கி, இழிவுபடுத்திய கும்பலுக்கு முன்பிணை வழங்கமுடியாது என திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் கடந்த வாரம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம், ஜி.எஸ்.டி. குறித்து துணிக்கடைக்காரர் சங்கீதா என்பவர் உட்பட அப்பகுதியினர் கேள்வி எழுப்பினர். அதையடுத்து ஒரு கும்பல் அவரின் கடைக்குத் தேடிச் சென்று, ஆபாசமாகப் பேசியும் கொலைவெறித் தாக்குதலும் நடத்தினர்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் அப்பகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் சின்னச்சாமி உட்பட்ட 5 பேரே என்பது உறுதியானது. அவர்களைக் கைதுசெய்யுமாறு வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகள் தங்களுக்கு முன்பினை தர வேண்டும் என திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சங்கீதாவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பாண்டியன் ஆகியோர் பிணை வழங்கக்கூடாது என வாதிட்டனர்.

தாக்குதல் காணொலியைப் பார்த்த முதன்மை அமர்வு நீதிபதி, இந்த வழக்கில் முன்பிணை வழங்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com