கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசின் சுகாதாரத் துறைச் செயலாளராகப் பணியாற்றிய பீலா வெங்கடேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 56.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் படிப்பை முடித்த பீலா வெங்கடேசன், 1997ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். முந்தைய ஆட்சியில் சுகாதாரத் துறை முதலிய முக்கியமான துறைகளில் பொறுப்புகளை வகித்தவர். கொரோனா காலகட்டத்தில் அன்றாடம் நிலவரத்தை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துச்சொன்னதன் மூலம் பிரபலமானார். அதன்மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவராக ஆனார்.
அதே சமயம், தில்லியில் நடைபெற்ற ஒரு மத நிகழ்வில் ஒரே இடத்திலிருந்து கொரோனா பரவியது எனக் கூறியதையொட்டி, பல தரப்பினரும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆட்சி மாறிய நிலையில் கடைசியாக மின்சாரத் துறையின் செயலாளராக இருந்துவந்தார். மூளையில் கட்டி இருப்பது தெரியவந்ததால் நீண்ட கால விடுப்பில் சென்றார்.
நான்காம் கட்டப் புற்றுநோய் எனும் நிலையில், மருத்துவமனையில் ஆறு மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கு முன்னர் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்குத் திரும்பியவர், நோயுடன் போராடிவந்தார்.
இந்நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.