பெஞ்சல் புயல் நேற்றிரவு கரையை கடந்தவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புயல் இன்னும் கரையை கடக்கவில்லை, அது கடலில்தான் உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு பெஞ்சல் எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி நேற்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழைப் பெய்யத் தொடங்கியது. நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர சூறாவளிக் காற்றுடன் நிலப்பரப்பை எட்டியது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது. முதலில் முனைப்பகுதியும், அடுத்து மையப்பகுதியான கண் பகுதியும், இறுதியில் வால் பகுதியும் கடந்தது.
இதன்படி இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையைக் கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் பெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரமாக நகராமல் இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பெஞ்சல் புயல் 3 மணி நேரமாக நகராமல் இருக்கிறது. புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் நகராமல் இருப்பதால் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் இதுவரை பதிவான மழையில் இதுவே அதிகபட்ச மழை. கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி புதுச்சேரியில் 21 செ.மீ. மழை பெய்தது. தற்போது 46 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
பெஞ்சல் புயல் மேற்கு- தென் மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அடுத்த சில மணி நேரத்தில் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்" என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், பெஞ்சல் புயல் இன்னும் கரையை கடக்கவில்லை என தனியார் வானிலை பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது: “பெங்கல் புயல் இன்னும் கடலில் தான் உள்ளது. இன்னும் கடற்கரையை கடக்கவில்லை. இத்துடன் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணைத்துள்ளேன் அதை பார்க்கவும். இன்று மதியம் அல்லது மாலையில் தான் அது கரையை கடக்கும்.
இந்தப் புயலானது கடற்கரையில் நிலை கொண்டுள்ளதால் கடலூர் பாண்டி விழுப்புரம் கள்ளக்குறிச்சி சேலத்தில் இன்று மாலை வரை மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்.
மயிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 மில்லி மீட்டரும் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் 490 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.