நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.
நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.

லியோ படத்தில் அந்த வார்த்தை- பா.ஜ.க. கண்டனம்!

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதில் பெண்களை இழிவுபடுத்தும் தரக்குறைவான வசனம் இடம்பெற்றுள்ளதாக பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற தரக்குறைவான வசனங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. அதிலும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்டாடும் கதாநாயகர்கள் மூலம் இந்த வசனங்கள் வெளிப்படுவது துரதிருஷ்டவசமானது. சமுதாயத்தைத் திருத்தவேண்டிய பொறுப்புள்ள கலை உலகத்தினர் இளைஞர்கள் மத்தியில் சீரழிவை உருவாக்க காரணமாக அமைந்துவிடக்கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

”திரைப்பட தணிக்கை துறை இது போன்ற வசனங்களை, ஆபாச காட்சிகளை தணிக்கையின்போது நீக்கினாலும், ஓ.டி.டி தளங்களில் வெளியிடும் போது நீக்கிய காட்சிகளை, வசனங்களை ஒளி, ஒலி பரப்புவது பொறுப்பற்ற செயல். அதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தால், "ஐயோ! கருத்து சுதந்திரத்தி‌ற்கு தடையா" என சிலர் கிளம்பி விடுகிறார்கள்.

கடந்த பொங்கலன்று பிரபல நடிகர் நடித்து வெளியான ஒரு திரைப்படத்தில் ' ....த' என முடியும் ஒரு தரக்குறைவான வார்த்தை கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட பலரால் நாற்பதுக்கும் மேற்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டன. தணிக்கையில் அவை நீக்கப்பட்டன. ஆனால், ஓ.டி.டி தளங்களில் அவை வெளியான போது அந்த வசனங்கள் இடம்பெற்றன. திரைத்துறையின் ஒரு இயக்குநரிடம் இது குறித்து கேட்டபோது, 'தமிழ் இளைஞர்கள், இப்படிப்பட்ட வார்த்தைகளை நடிகர்கள் சொல்வதை விரும்புகிறார்கள்' என்று சொன்னது, உண்மையிலேயே திரைத்துறையினர் சமுதாயத்தை எப்படிச் சீரழிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.” என்று நாராயணன் திருப்பதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

மக்களின் நன்னடத்தைக்கு உதாரணமாக விளங்கவேண்டிய பிரபல நடிகர், நடிகைகள் இளைஞர்களின் சீரழிவுக்கு காரணமாய் அமையலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com