செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன்
செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன்

பா.ஜ.க. – அ.ம.மு.க. கூட்டணி உறுதியானது – டிடிவி தினகரன் தகவல்!

பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளோம் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பா.ஜ.க. கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"அ.ம.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகிவிட்டது. பா.ஜ.க. சார்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் டெல்லி பிரதிநிதி கிஷன் ரெட்டியும் என்னிடம் இன்று தொலைபேசியில் பேசினார்கள். அவர்களிடம் பா.ஜ.க. கூட்டணிக்கு அ.ம.மு.க.வின் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்தேன். கடந்த மூன்று மாதங்களாகவே பா.ஜ.க. தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். இன்று அதிகாரபூர்வமாகப் பேசினோம்.

அ.ம.மு.க.வின் கோரிக்கைகளை ஏற்கெனவே கடிதம் மூலமாக கொடுத்துவிட்டோம். பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளோம். கடந்த 6 மாதங்களாக எங்களிடம் பாஜக பேசிக்கொண்டிருக்கிறது. அதில் கடந்த மூன்று மாதங்களாக கூட்டணி குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தோம்.

எங்களின் தேவை என்னவென்பது பா.ஜ.க.வுக்குத் தெரியும். உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். எந்தவித நிர்பந்தமும் எங்களுக்குக் கிடையாது. தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என பா.ஜ.க. நிர்பந்திக்கவில்லை. எங்களுக்கென தனிச் சின்னம் உள்ளது.

தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தும் நிலை நீடித்தால், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று தான் கூறினேன். தற்போது தமிழகத்தை பாதிக்கும் எந்தத் திட்டங்களையும் பா.ஜ.க. அமல்படுத்தவில்லை. வருங்காலத்தில் தமிழகம் முன்னேறுவதற்கு உதவுவதாக பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுத்துள்ளார். எனவே, எந்தவித உறுத்தலும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறோம்.

பாஜக இந்தியாவின் வளர்ச்சிக்கான இயக்கம். அவர்களின் கொள்கைகளில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த காலகட்டத்தில் தேவையான ஓர் கட்சி பாஜக என்பதே என்னுடைய நிலைப்பாடு. நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை.

அண்ணாமலை அதிகாரியாக இருந்தவர். அவர் என்னிடம் நட்போடு எதையும் திறந்த மனதுடன் பேசுகிறார். அதனால், எனக்குப் பிடித்த நண்பராக இருக்கிறார்." என்று தினகரன் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com