தனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி' என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்று.” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில், அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வழக்கறிஞர் கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை விசிகவினர் தாக்கியதோடு அவரது வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி' என்பது தெரியவருகிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிப்படத் தெரிகிறது.
எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.
அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திட வேண்டுமென கோருகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.