மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

சனாதனத்தை வைத்து பிரதமர் குளிர்காய்கிறார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சனாதனம் பற்றி பேசி பிரதமர் மோடி உட்பட்ட பா.ஜ.க.வினர் திசைதிருப்பும் தந்திரத்தைக் கையாள்கின்றனர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள அவர்,

“ நாட்டில் நடைபெறும் - பற்றி எரியும் எந்தப் பிரச்சினைக்கும் வாய்திறக்காத பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி 'சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்' என்று ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள். சனாதனம் பற்றி ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்; பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளித்துவிடக் கூடாது.” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

”பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அந்தக் கட்சியின் கஜானா மட்டும் அதிகமாக நிரம்பியது. ஊழல்களும், முறைகேடுகளும் மட்டுமே நடந்தன. 7.50 லட்சம் கோடி ரூபாய் இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக பா.ஜ.க. சனாதனப் போர்வையைப் போர்த்தி பதுங்கிக்கொள்ள பார்க்கிறது.” என்றும்,

”நான்கு மாத காலமாக மணிப்பூர் பற்றி எரிகிறது. அதை அணைக்க முதுகெலும்பு இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதையெல்லாம் பேசவிடாமல் திசைதிருப்ப பா.ஜ.க. முயல்கிறது.” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் ஊழல் - மதவாத - எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்றும் எந்த கவனச் சிதறலுக்கும் இடம் அளித்துவிடக்கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com