திருவள்ளூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்.
திருவள்ளூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்.

அலுவலகத்தைவிட்டு வெளியே வராத அமலாக்க, வருமானவரி துறைகள் – ஸ்டாலின் சாடல்!

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் அவரவர் அலுவலகத்தைவிட்டு வெளியேகூட வருவதில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருவள்ளூரில் இன்று நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.

தனக்கு காய்ச்சலும் - தொண்டை வலியும் ஏற்பட்டு, இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உரையாற்ற முடியாமல் போனதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசுகையில்,

”தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதே மாதிரியான சாதனைகள் ஒன்றிய அளவிலும் நிகழ்த்தப்பட வேண்டும்.

இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்றால், நாம் செய்த – செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல், பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. பா.ஜ.க.வின் இந்தத் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.க.வின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அடிமை அ.தி.மு.க.! இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.” என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

”தி.மு.க.வும் இந்தியா கூட்டணியும் பா.ஜ.க.வின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றுதான், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனால்தான், வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் நடைபெறுகிறது. ரெய்டுகள் மூலமாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல் நம்மையும் மிரட்டலாம் என்று பகல்கனவு காண்கிறார்கள். வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் அவரவர் அலுவலகத்தைவிட்டு வெளியேகூட வருவதில்லை. ஆனால், இங்கு நம் தமிழ்நாட்டில், நம்முடைய இயக்கத்தினர் ஒவ்வொருவரையாகச் சோதனை செய்கிறார்கள்.

இப்போது அமைச்சர் சகோதரர் வேலு அவர்களைச் சோதனை செய்கிறார்கள். இப்படி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் ரெய்டுகளில், வழக்குகளில் – கன்விக்சன் ரேட் Conviction Rate எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் ஒரு விழுக்காடு கூட இல்லை. வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான - பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும்! அதனால்தான் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியம் என்று சொல்கிறேன்.

இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகிற வெற்றி என்பது, மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும். கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை நாசப்படுத்திய அடிமை அ.தி.மு.க.வும் – தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பா.ஜ.க.வும் –சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணை போகும் அதன் கூட்டணிக் கட்சிகளும் - வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி - மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது.” என்றும் ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியின் பேச்சு முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com