கி.வீரமணி
கி.வீரமணி

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…? – கி.வீரமணி எச்சரிக்கை!

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு ரத்தாகும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. என்ற மனுதர்ம ஆட்சியில் இட ஒதுக்கீட்டை அறவே பறிக்கும் முயற்சியை பற்பல ரூபத்தில், படிப்படியாக அமல்படுத்தி உயர் ஜாதியினரான பார்ப்பனர் மற்றும் அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள முன்னேறிய வகுப்பினர் நலனைப் பாதுகாக்கும் ஆட்சியாகவே இந்த பத்தாண்டு கொடுத்த உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாகவே நடைபெற்றும், மூன்றாம் முறையும் ‘இராமர் பக்தி’ என்ற மயக்க மருந்தினை - பாமர வாக்காளர்களுக்குத் தந்து, அவர்களிடம் உள்ள வாக்குகளைப் பறிக்க பக்தி என்ற பகல் வேஷம் கட்டி ஆடுகிறது!

இப்போது மற்றொரு பேரிடியைத் தந்து - நோட்டம் பார்ப்பதுபோல் - பல்கலைக் கழகங்களில் - உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வரைவு - வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ள பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ள திட்டத்தில், ஓ.பி.சி. (OBC), எஸ்.சி. (S.C.), எஸ்.டி. (S.T.) பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ‘‘தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்காவிட்டால்’’ அந்த இடங்களை ரத்து செய்து, பொது பிரிவாக அறிவித்து, மற்ற பிரிவினரை - அதாவது உயர்ஜாதியினரை பணி நியமனம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது!

இதற்கு உடனடியாக சுனாமிபோல எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியதைக் கண்டு, ஒன்றிய கல்வி அமைச்சகம், ‘அய்யோ, இப்படி பொதுத் தேர்தல் சமயத்தில், இந்தப் பூனைக்குட்டியை வெளியே விட்டுவிட்டதே - இந்த யு.ஜி.சி.மூலம் நாம் இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு முக்கியக் கல்லாகப் பிடுங்கி எடுத்து, கட்டடத்தையே வீழ்த்திட போட்ட ரகசியத் திட்டம் வெளியாகிவிட்டதே’ என்று புரிந்து, உடனடியாக இந்த அறிவிப்பு ‘வாபஸ்’ வாங்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளது!

இதைக் கண்டு சமூகநீதிக்கான பல கட்சி, பல பிரிவு போராளிகளும்கூட உடனடியாக வந்த ஆபத்து நீங்கிவிட்டது என்று கருதி, முழுமையான புரிதலோடு இந்த ‘‘ஆர்.எஸ்.எஸ். க(ஆ)ட்சியின் வித்தை’’களைப் புரியாதவர்கள் நினைக்கக் கூடும்.

இது ஒரு ஆழம் பார்க்கும் வெள்ளோட்டம்; இப்படி ஓர் அறிவிப்பு இப்போது பின்வாங்கப்பட்டாலும், தேர்தல் முடிந்து மீண்டும் பலவித தந்திரங்களாலும், பக்தி மயக்க பிஸ்கெட்டுகளாலும் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி அமைய - மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிட்டால், இத்திட்டம் வெளிப்படையாகவே அது சட்டமாகவே ஆகிவிடும் பேராபத்து உள்ளது; அந்தக் கரு கலைக்கப்படவில்லை.

அந்த ஆர்.எஸ்.எஸ். இட ஒதுக்கீடு ரத்து திட்டம் என்ற பாம்பு தன் விஷத்தோடு மீண்டும் புற்றுக்கு வெளியே தலைநீட்டி நோட்டம் பார்த்தபின், உள்வாங்கியுள்ளது!

முன்பே ‘நீட்’ தேர்வு, கியூட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு என்று உங்களது கல்வி வளர்ச்சிக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் இத்திட்டத்தில், இட ஒதுக்கீடு - ஒடுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரத்து என்ற தயார் நிலை ஒளிந்துள்ளது. இளைஞர்களே, ஏமாறாதீர்! உடனே, இதனை மக்களிடம் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரம் செய்வது அவசர, அவசியம்!” என்று வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com