
நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் இறந்தது ஒரு 'லாக்-அப்' மரணம் அல்ல, மாறாக நீதிமன்றக் காவலில் சிறை வளாகத்திற்குள் நடந்த மரணம் என்று பா.ஜ.க. தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
” கடந்த 9 ஜூலை 2026 அன்று கைது செய்யப்பட்டு அன்றே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அதன்பின் நான்கு நாள்கள் கழித்து 13 ஜூலை அன்று அவரது மரணம் சிறைத்துறையின் பொறுப்பில் நடந்துள்ளது. காவல்நிலைய விசாரணைக்குப் பிறகான மருத்துவப் பரிசோதனை, சிசிடிவி பதிவுகள் சபரிவர்மனுக்குக் காயங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் காவல்நிலைய 'லாக்-அப்' மரணங்களில் காணப்படும் வழக்கமான கொடூர சித்திரவதை, துன்புறுத்தலிலிருந்து வேறுபட்டது. இதை வழக்கமான 'லாக் அப்' மரணம் என்று தவறாகச் சித்திரிக்கக்கூடாது. அதைவிடக் கொடூரமான சிறை நிர்வாகத்தின் சித்திரவதை, அட்டூழியங்கள், தீவிர குறைபாடுகள், அலட்சியப் போக்கை வெளிப்படுத்துகிறது. சிறைக்குள் வன்முறையைத் தடுக்கத் தவறியது, சிறை ஊழியர்களின் அராஜகம், தாமதமான மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளி கைதிக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது, சிறைக் கைதிகளின் மீது கட்டுப்பாடின்மை ஆகிய குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. இதற்கு முன்னரும் தமிழக சிறைகளில் இது போன்ற குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த மரணமானது மீண்டும் சிறைகளில் நடைபெறும் தொடர் குற்றங்களைத் தோலுரித்து காட்டுகிறது. நீதிமன்றக் காவலில் சிறைகளில் ஏற்படும் மரணங்கள், காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களைவிட அதிகம் என்பதைக் காட்டுகின்றன. இவை சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மோசமான மேற்பார்வை, பொறுப்பின்மை போன்ற அமைப்புரீதியான கோளாறுகளால் ஏற்படுகின்றன.
இந்தத் தொடர் குறைபாடுகளுக்கு சிறைத்துறை பொறுப்பேற்க வேண்டும். முழு குற்றத்தையும் காவல்துறையின் மீது சுமத்துவது தவறானது. காவல்துறை வேறு, சிறைத்துறை வேறு என்பது கூட அறியாமல் குறிப்பிடுவது முறையற்றது. காவல் நிலைய மரணங்கள், சிறை மரணங்கள் இடையே தெளிவான வேறுபாடு உள்ளன. சிறைத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு உள்ளது.” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.