வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்!
சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை இன்டர்போல் போலீஸ் உதவியுடன் கைது செய்ய சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நேற்று காலை 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் தகவல் வந்தது.
அந்த தகவலில், 'உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள். தாமதித்தால் குண்டு வெடித்துவிடும்' என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய்களுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
காவல் துறை சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி, மிரட்டல் என்பது தெரியவந்தது.
மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிப்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால் மாணவ, மாணவிகள் அச்சமின்றி பள்ளிக்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.