ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை முன் பாட்டில் வீச்சு: அரசியல் கட்சிகள் கண்டனம்!

ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு, நேற்று பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“மாநிலத்தின் சட்ட ஒழுங்குக்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும், தமிழ்நாடு அமைதிப் பூங்கா என முன்னர் இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை தன் சமூக ஊடகப் பக்கத்தில், “ 2022 பிப்ரவரி மாதம் கமலாலயத்தின் மீது தாக்குதல் நடத்திய அதே நபர்தான் ஆளுநர் மாளிகை தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார். இந்த தொடர் தாக்குதலுக்கு தி.மு.க. அரசுதான் நிதியுதவி அளிக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.” என்று குற்றச்சாட்டாகவும் பதிவுசெய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “இந்தத் துணிச்சல் ரவுடிகளுக்கு வரக் காரணம், வன்முறையாளர்கள் மீது தி.மு.க. அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதுதான்.” என்று குறைகூறியுள்ளார்.

“பெட்ரோல் குண்டு வீசியவரின் உண்மையான நோக்கம் தெரியவர வேண்டும். ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com