தொண்டரை பந்தாடிய பவுன்சர்கள்; விஜய் மீது பாய்ந்த வழக்கு!

தவெக மாநாடு
தவெக மாநாடு
Published on

தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தொண்டரை தூக்கி வீசிய சம்பவத்தில் விஜய் மீது முதல் குற்றவழக்கு பதிவாகி உள்ளது.

மதுரையில் தவெகவின் 2ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மாநாட்டு மேடைக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் ரேம்ப் வாக் சென்றார்.

இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நடிகர் விஜய் கை அசைத்த படியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு தொண்டர், ரேம்ப் வாக் மேடை மீதேறி விஜயை நெருங்க முயன்றார். அவரைச் சுற்றி இருந்த பவுன்சர்கள், அந்த தொண்டரை அலேக்காக தூக்கி வீசினர். இது தொடர்பான வீடியா சமூக ஊடகத்தில் வெளியாக பெரும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட தொண்டரான சரத்குமார் என்பவர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், நடிகர் விஜய், அவரின் 10 பவுன்சர்கள் மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த வழக்கு தான் நடிகர் விஜய் மீது பதியப்பட்ட முதல் குற்ற வழக்காகும்.

கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக நடிகர் விஜய், மற்றவர்களாக பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த மதுரை தவெக மாநாடானது, கூட கோவில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருகிறது. எனவே, தற்போது பெரம்பலூர் குன்னம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மதுரை கூடகோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கு மாற்றப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com