தாய், தந்தை, மகன் கொடூர கொலை: 'கவலையின்றி இருக்கும் முதல்வர்' – அண்ணாமலை விமர்சனம்

படுகொலை செய்யப்பட்ட அலமாத்தாள், செந்தில்குமார், தெய்வசிகாமணி
படுகொலை செய்யப்பட்ட அலமாத்தாள், செந்தில்குமார், தெய்வசிகாமணி
Published on

திருப்பூரில் தாய், தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

திருப்பூர் அருகே சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அலமாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு சட்ட ஒழுங்கை சரியாக காக்க தவறியதாலேயே இந்த படுகொலை நடந்திருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்:

“திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

கடந்த ஆண்டும் பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாதபடி காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால், தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார்.

மாநில அரசின் முழுமுதற் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்க இயலாத திமுக அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும் கைது செய்ய மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தாமல், அவர்கள் பணியைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதித்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com