திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்தன, எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை பேப்பரை காட்டுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் வாரிசு இல்லை. நாட்டு மக்களைத்தான் அவர்கள் வாரிசுகளாக பார்த்தார்கள். மக்களுக்கு எது செய்தால் நன்மை கிடைக்கும் என நினைத்து ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்தனர். அதனால் தான் இன்றைக்கு அதிமுகவை யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை.
திமுக கூட விமர்சிக்க முடியாத அளவுக்கு நாம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். நாம் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதைதான் குறையாக சொல்கிறார். ஆட்சியில் குறை இருந்ததாக அவர்கள் சொல்லவில்லை.
சிவி சண்முகம் சொன்னது போல், நாமும் தேர்தல் வியூக வகுப்பாளர்களை வைத்துள்ளோம். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.
2011 இல் திமுக எதிர்க்கட்சியாக கூட இல்லை. கருணாநிதி இருந்தபோது உங்களுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட கிடையாது.
சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும். இதை தெரியாமல் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார்.
கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஆட்சிக்கு வந்தது திமுக. அவர்கள் கொடுத்த நான்கில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.
கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை, கேஸ் மானியம் தரவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை, நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தவில்லை, காலி பணியிடங்களை நிரப்பவில்லை.
மக்களுக்கு நன்மை பயக்க கூடிய திட்டங்களை எல்லாம் திமுக நிறுத்திவிட்டது. அதிமுக கொடுத்த அழுத்தத்தினால் தான் 28 மாதங்கள் கழித்து மகளிர் உரிமைத் தொகையை திமுக கொடுத்தது.
அடுத்த ஆண்டு நடைபெறுகிற தேர்தலை கருத்தில் கொண்டு விதிகளை தளர்த்தி, 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை தருவதாக ஸ்டாலின் சொல்கிறார். நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் ஓட்டு மட்டும் அதிமுகவுக்குதான் போடுவார்கள். ஸ்டாலின் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டார். இளைஞர்களின் செல்வாக்கையும் இழந்துவிட்டார். அதனால் தான் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் தருவதாக சொல்லியிருக்கிறார். இளைஞர்களின் வாக்குகளுக்காக 10 லட்சம் லேப்டாப்பை கொடுக்கிறார்கள். அந்த லேப்டாப்பை கூட உரிய நேரத்தில் கொடுக்கவில்லை.
விவசாயிகள் போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள். விவசாயிகளுக்கு எதிரானது இந்த அரசு.
திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை குறித்து கேட்க வேண்டாம். இந்த ஆட்சியில் ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை தொட்டத்தான் ஷாக் அடிக்கும், இப்போ கரண்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்கும் அளவுக்கு உள்ளது. வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கிறது திமுக அரசு.
உடல் உறுப்பு விற்று வாழ வேண்டிய நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினரின் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்தன, எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று கேட்டால் வெள்ளை பேப்பரை காட்டுகிறார்கள்.
திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. ஆனால் அதிமுக ஜனநாயக இயக்கம். கட்சிக்காக உழைக்கும் யாரும் பதவிக்கு வர முடியும். திமுக போல் அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. எனக்கு பின்னாலும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதனை நிரூபிக்கும் வகையில் நாம் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.
திமுக எவ்வளவோ கொள்ளையடித்து வைத்துள்ளது. இந்த தைப் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின் போது ரூ.2,500 வழங்கப்பட்டது. அப்போது ஸ்டாலின், ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இப்போது நான் கோரிக்கையாக வைக்கிறேன். அதேபோல் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்.
அதிமுக எப்போதும் சொந்த பலத்தை நம்பி இருக்கும் கட்சி. திமுக பலம் இழந்துவிட்டது. அதன் காரணமாகவே கூட்டணியை நம்பி இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி அமைப்போம். நிச்சயமாக அருமையான கூட்டணி அமையும். 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்கும். கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும்” என்றார்.