ஓய்ந்தது இடைத்தேர்தல் பிரச்சாரம்- தாராபுரத்தில் நா.த.க. தகராறு!

CM Vijay, M.K.Stalin By-election campaign
முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல் பிரச்சாரம்
Published on: 

நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல்(த.வெ.க.), பரந்தாமன் (தி.மு.க.), கணிதா சம்பத்(அ.தி.மு.க.), சுகந்தி (சி.பி.எம்.) உட்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா(த.வெ.க.), சுகன்யா(தி.மு.க.), பானுமதி(அ.தி.மு.க.), லட்சுமணன் (சி.பி.ஐ.), கார்த்திகா(நாம் தமிழர் கட்சி) உட்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டு தொகுதியிலும் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் வாக்கு சேகரித்தார். சாலைவலம், சாலையோரக் கடையில் தேநீர் அருந்துதல், வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டுவது, மாட்டு வண்டி ஓட்டுவது எனப் பல வகைகளில் அவர் வாக்கு சேகரிக்க முயன்றார். மேலும், த.வெ.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தாராபுரத்தில் சாலைவலம் மேற்கொண்டு, 2 தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட்ட அக்கட்சியின் மற்ற தலைவர்களும் தி.மு.க.விற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்துக்குக் கடைசி நாளான நேற்று நா.த.க. வேட்பாளர் கார்த்திகா திறந்த வாகனத்தில் நின்று வாக்குசேகரித்தார். அப்போது, விஜய்யின் சாலைவலம் இருப்பதால் கார்த்திகாவின் பிரச்சாரத்தைக் காவல்துறையினர் தடுத்தனர். அதற்கு அவரும் நா.த.கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். அங்கிருந்த விஜய் கட்சியினரும் எதிர்ப்பு கோசம் போடவே பிரச்னை உண்டாகும் சூழல் ஏற்பட்டது. கார்த்திகா, நா.த.க.வினரை காவல்துறையினர் தடுத்துவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இடைத்தேர்தலுக்காக மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com