என்.எல்.சி கைப்பற்றியுள்ள விவாசய நிலங்கள் & நீதிபதி தண்டபாணி
என்.எல்.சி கைப்பற்றியுள்ள விவாசய நிலங்கள் & நீதிபதி தண்டபாணி

“வள்ளலார் பிறந்த ஊரிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை!” -உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

என்.எல்.சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் தடைவிதிக்க கோரி, என்.எல்.சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு, வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, என்.எல்.சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்திருக்கிறார்.

என்.எல்.சி பணியாளர்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள் என்றும், அதற்காகப் பணத்தைச் செலவிடுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே, என்.எல்.சி நிறுவனத்துக்காகப் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது குறித்து நீதிபதி எம்.தண்டபாணி கேள்வி எழுப்பினார். என்.எல்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலத்தின் மதிப்பைவிட மூன்று மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பாகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, பத்தாண்டுகளுக்கு முன்பாக இழப்பீடு தொகை கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது நிலத்தை எடுக்க உரிமையாளர்கள் எதிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தண்டபாணி, “20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் இருந்த நிலையில், பயிரை அறுவடை செய்யும்வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா?.

பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளைப் பார்க்கும்போது அழுகை வந்தது. `வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதைக் காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஒரு பயிர் என்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மனிதன் உள்ளிட்ட அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமாகப் பயிர்கள் உள்ளது. இழப்பீடு பெற்றாலும் பயிர்கள் அழிக்கப்படுகிறதே எனக் கோபம் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கப் போகிறோம். அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். அப்போது நிலக்கரி பயன்படாது. இதற்காக என்.எல்.சி கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் கதாபாத்திரங்கள் ஊடே பயணிக்கும் நெய்வேலி, அணைக்கரையை ஒட்டி கொள்ளிடம் பாய்ந்து ஓடும் அழகை மறக்க முடியாது. அந்த இடங்களெல்லாம் தற்போது பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

`பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள். பூமியைத் தோண்டித் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் பெரும் கவலை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் கைவைத்தால் தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய பருவ மழை சுத்தமாக நின்றுவிடும். காவிரி டெல்டா, தாமிரபரணி பகுதி, வட தமிழகத்தில் சில பகுதிகள் போன்ற மூன்று இடங்களில்தான் நெற்பயிர் பாசனம் இருக்கிறது. அதை அழித்துவிட்டால் அரிசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அதிகாரிகளும் புரிந்துகொள்வதில்லை என்றும் இயந்திரத்தனமாகச் செயல்படுவதாகவும் நீதிபதி எம்.தண்டபானி அதிருப்தி தெரிவித்தார்.

இதற்கிடையில், வழக்கு விசாரணையின்போது என்.எல்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `நீதிமன்ற அறையில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள், ஏசி ஆகியவற்றுக்கு நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம்தான் காரணம்' எனக் குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி, இன்று நாள் முழுவதும் தனது விசாரணை அறையில் இருக்கக்கூடிய ஏசியை அணைத்து வைக்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். பூமியில் இருக்கக்கூடிய அனைவரும் ஏசி காற்றில் வாழ்வதில்லை என்றும், புங்கை மரக் காற்றிலும், வேப்ப மரக் காற்றிலும் இளைப்பாறுபவர்கள் ஏராளமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com