கள்ளக்குறிச்சி விவகாரம் - ஐஜி/ டிஐஜி விசாரிக்க நீதிபதி உத்தரவு!

arul vignesh
அருள் விக்னேஷ்
Published on: 

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்மையில், மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இது உண்மையல்ல என்று எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்து வந்த நிலையில், இதுகுறித்து அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் முறையான விசாரணையை மேற்கொண்டு, அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வழக்கறிஞர் திரிசூலி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரின் சார்பாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இன்று உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன் தலைமையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின் பேரில், பணியிடத்தில் பெண்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், நீதிபதி லட்சுமி நாராயணன், “"யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள். அது அரசுக்கு தர்மசங்கடமாக ஆகிவிடும். இந்த வழக்கில் முன்னரே நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது. எஸ்.பி.க்குப் பதிலாக ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்." என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 27ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.

டிச.22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல்செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram