சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன் விவரம்:
"கடந்த ஆட்சிக் காலங்களில் தங்களது வாழ்வாதாரம், உரிமைகள், சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஜனநாயக முறையில் குரல் கொடுத்த மக்களுக்கு உரிய அனுமதிகள் மறுக்கப்பட்டதோடு, இன்று வரையிலும் அவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகளால் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
மேலும், உழவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக அவர்கள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன.
அதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள்மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது.
ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள், உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் போராடியபோதும், அவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற முடிவு செய்துள்ளது." என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.