சாதிய பாகுபாடு: பழங்குடி பெண் தலைவர் புகாருக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

தர்ணாவில் ஈடுபடும் சங்கீதா (கோப்புப்படம்)
தர்ணாவில் ஈடுபடும் சங்கீதா (கோப்புப்படம்)
Published on

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாதிய வன்கொடுமை செய்வதாக கூறி பழங்குடி பெண் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆனாங்கூா் ஊராட்சியைச் சோ்ந்த ஏழுமலை மனைவி சங்கீதா. பழங்குடி இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா், அந்த ஊராட்சிமன்றத் தலைவராகப் பொறுப்பில் உள்ளாா். இவா், கடந்த புதன்கிழமை பிற்பகல் விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே, பழங்குடி இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த என்னை ஊராட்சி மன்றத் தலைவா் பணியை செய்யவிடாமல் சிலா் தடுத்து வருகின்றனா். ஊராட்சி துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் சிலா் தலைவருக்கான இருக்கையில் அமரவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்து வருகின்றனா் என புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் பதாகையுடன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

பொது இடத்தில் தா்னாவில் ஈடுபட்ட ஊராட்சிமன்றத் தலைவா் சங்கீதா மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆனாங்கூர் கிராம ஊராட்சியில் கடந்த 2021இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், பழங்குடியின இருளர் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று சங்கீதாஏழுமலை ஆனாங்கூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

பதவியேற்ற நாள் முதல் ஊராட்சி மன்றத்தலைவரின் தலைமையில் பல்வேறு கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. மேலும், கடந்த காலங்களில் சுதந்திர நாள், குடியரசு நாள் ஆகிய நாட்களில் ஊராட்சி மன்றத்தலைவர் கொடியேற்றி வைத்துள்ளார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எவ்வித சாதிய பாகுபாடுகளும் இன்றி சமத்துவத்துடனே நிர்வாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஊராட்சிமன்றத் தலைவர் அளித்த புகாரின் மீது விழுப்புரம் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) மேற்கொண்டு வருகிறார். மேலும், ஆனாங்கூர் ஊராட்சிமன்றத் தலைவரால் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com