டெல்டா மாவட்டங்களில் கடை அடைப்பு
டெல்டா மாவட்டங்களில் கடை அடைப்பு

காவிரி விவகாரம்: முடங்கிய டெல்டா மாவட்டங்கள்!

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க கோரியும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு வணிகர்கள் சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 30,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 12,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த போராட்டம் காரணமாக ஒட்டுமொத்த டெல்டாவும் முடங்கியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com