அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

காவிரி விவகாரம்: பேசினால் குளோஸ் ஆகிடும் - துரைமுருகன் விளக்கம்!

காவிரி நீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தையால் பயனில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், அடுத்த 15 நாள்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதில் கர்நாடக அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டுக்கு அவர்கள் பதில் சொல்வதைவிட காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். எங்களுக்கு (தமிழ்நாட்டுக்கு) இருக்கின்ற ஒரே ஒரு கடைசி முடிவு உச்சநீதிமன்றத்தை நாடுவதுதான். செப்டம்பர் 21ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் கர்நாடக அரசின் முடிவு என்னவென்று தெரிந்துவிடும். பிறகு அதுவும் வழக்கில் இணைத்துக் கொள்ளப்படும்.” என்றார் துரைமுருகன்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் விவரம்:

இங்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது பெரிய விஷயம் அல்ல. 21ஆம் தேதி என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்துத்தான். பிறகு அதைப் பற்றி பேசலாம்.

கர்நாடக அதிகாரிகள் காவிரியில் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள். மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுமா?

தாராளமாக வைப்போம். உச்சநீதிமன்றமே வழிகாட்டலை வழங்கலாம்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

மறுபரிசீலனை செய்யாமல் 5 ஆயிரம் கன அடி நீரை வழங்க வேண்டும் என்கிறோம்.

உச்ச நீதிமன்றம்வரை சொல்வோம் என்று சித்தராமையா நேற்று சொல்லியிருக்கிறாரே?

உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் தான். இன்றைக்கு அல்ல; எப்போது இந்த பிரச்னை தொடங்கியதோ, அதேபோல தான் இன்றும் உள்ளது. காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்துவதற்கு கர்நாடகம் ஒத்துக் கொள்ளவில்லை. நீதிமன்றம் வரை சென்றுதான் அதைப் பெற்றோம். அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அதை எதிர்கொண்டுதான் தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். இனியும் பெறுவோம்.

சென்னையில் உள்ள கனிவளத் துறை அலுவலகத்தில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்களே?

அது எனக்குத் தெரியாது.

இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்கக் கூடிய முக்கிய தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். கர்நாடக முதலமைச்சரிடம் பேசினால் இது சுமுகமாகவே முடியும் என்று சொல்கிறார்களே?

பேசினால் க்ளோஸ் ஆகிடும். பேச்சுவார்த்தை சரிபடவில்லை என்றுதானே நீதிமன்றம் சென்றிருக்கிறோம். மறுபடியும் பேச்சுவார்த்தை என்று போனால், நம்முடைய சட்ட நடவடிக்கையை விட்டுவிடுகிறோம் என்று அர்த்தம்.

காங்கிரஸ் அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் முடிவுக்கு வரும். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அதை செய்ய மறுக்கிறார் என்கிறார்களே?

அவர்கள் எங்களைக் கொடுப்பதற்குச் சொல்கிறார்கள்.

டெல்டா விவசாயிகளுக்கு நீர்வளத் துறை அமைச்சரான நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்போம். நிச்சயம் நிவாரணம் வாங்கித்தருவோம்.” என்றார் துரைமுருகன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com