கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும் கைதியை, வீட்டு வேலைக்கு வைத்து தாக்கியது தொடர்பாக டி.ஐ.ஜி. உட்பட 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் சிறையில் உள்ள பணியாளர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார்(30) என்பவர், கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசியாக இருக்கிறார். இவரை சிறைத் துறை டிஐஜி இராஜலட்சுமியின் வீட்டில் வேலைசெய்ய வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் 4.5 இலட்சம் ரொக்கத்தையும் வெள்ளிப் பொருட்களையும் திருடியதாகக் குற்றம் சாட்டி, தாக்கியுள்ளனர்.
தனி அறையில் அடைத்துவைத்து சிவக்குமாரைத் தாக்கி, சித்ரவதை செய்தார்கள் என்று அவரின் தாயார் கலாவதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வு, டிஐஜி, சிறைக்கண்காணிப்பாளர் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு அதிகாரி ராஜு, சிறைக் காவலர்கள் ரசீத், மணி, பிரசாந்த், ராஜா தமிழ்ச்செல்வன், சுரேஷ், சேது, விஜி, சரஸ்வதி, செல்வி உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று கைதி சிவக்குமாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.
அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.